பதவியை மறந்து விட்டார்; அரசியல்வாதியாக செயல்படும் கவர்னர்; அமைச்சர் ரகுபதி காட்டம்!
பதவியை மறந்து விட்டார்; அரசியல்வாதியாக செயல்படும் கவர்னர்; அமைச்சர் ரகுபதி காட்டம்!
ADDED : அக் 02, 2024 07:11 PM

சென்னை: '' கவர்னர் ரவி, தனது பதவியை மறந்துவிட்டு அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ,'' என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை காந்தி மண்டபத்தில், நேற்று கவர்னர் ரவி துாய்மை பணியில் ஈடுபட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''காந்தி மண்டப வளாகத்தில், மது பாட்டில்கள் கிடந்தது வருத்தம் அளிக்கிறது,'' என வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது: கவர்னர் ரவி தனது பதவியை மறந்துவிட்டு அரசியல்வாதி போல் செயல்படுகிறார். மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை துண்டிக்கும் வகையில் செயல்படுவதுடன் கவர்னர் மாளிகையை அரசியல் பவனாக மாற்றுகிறார்.
தமிழகத்தில் பா.ஜ., அலுவலகமான கமலாலயத்துக்கு போட்டியாக உள்ள ஒரே இடம் கவர்னர் மாளிகை தான். ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தூதுவர் போலவும், நீட் தேர்வுக்கு ஒரு பிஆர்ஓ போலவும் செயல்படுகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
காந்தி மண்டபத்தை சுத்தம் செய்த கவர்னருக்கும், கேமராமேன் கண்களுக்கும் மதுபாட்டில் தெரிந்துள்ளது. அதிகம் குப்பை சேரக்கூடிய மெரினா கடற்கரையை கூட தூய்மையாக வைத்துள்ளோம். சுத்தம் செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி சிறப்பாக செய்து வருகிறது.
மதுவை தமிழக அரசால் மட்டும் ஒழித்து விட முடியாது. இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் முடியாது. எல்லா மாநிலங்களும் மது ஒழிப்பை கொண்டு வந்தால் தமிழகத்திலும் கொண்டு வருவோம்.
மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு தி.மு.க., அரசு. தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாத காரியம். அமல்படுத்துவது மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

