அவருக்கு வேற வேலையில்லை; ராமதாஸை சொல்கிறார் முதல்வர்!
அவருக்கு வேற வேலையில்லை; ராமதாஸை சொல்கிறார் முதல்வர்!
ADDED : நவ 25, 2024 12:08 PM

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'அவருக்கு வேற வேலையில்லை. அதனால் தான் தினமும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்,' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை எழில்நகரில் மழலையர் வகுப்புக்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி; பார்லிமென்ட் கூட்டத் தொடரில் தமிழகத்திற்கு தி.மு.க., எம்.பி.,க்கள் என்னென்ன கேள்விகளை எழுப்ப இருக்கிறார்கள்?
பதில்: எங்கள் கட்சியின் அனைத்து எம்.பி.,க்களையும் நேரில் அழைத்து, பார்லிமென்ட்டில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் பற்றி எடுத்துக் கூறியுள்ளோம்.
கேள்வி; குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், பெருமழையை எதிர்பார்க்கிறோமா?, என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?
பதில்; பெரு மழையை எதிர்பார்க்கிறோமா? எதிர்பார்க்கலையா? என்பது வேறு. நாங்கள் அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம், எனக் கூறினார்.
தொடர்ந்து, அதானி சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளிக்க மறுத்துச் சென்ற முதல்வர் ஸ்டாலின், பிறகு மீண்டும் திரும்பி வந்து, 'துறை ரீதியான அமைச்சர் அதற்கு பதில் சொல்லி விட்டார். நீங்கள் டுவிஸ்ட் வைக்காதீங்க,' எனக் கூறினார்.
அப்போது, அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாக சந்தித்தன் நோக்கம் என்ன? என்று ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, ' அவருக்கு வேற வேலை இல்லை. அதனால்தான் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை,'' என்றார்.