தொழில் போட்டி காரணமாக கட்சி ஆரம்பித்துள்ளார்: விஜயை மறைமுகமாக சாடும் ஆர்.எஸ்.பாரதி
தொழில் போட்டி காரணமாக கட்சி ஆரம்பித்துள்ளார்: விஜயை மறைமுகமாக சாடும் ஆர்.எஸ்.பாரதி
UPDATED : டிச 07, 2024 10:46 PM
ADDED : டிச 07, 2024 07:26 PM

சென்னை: '' தொழில் போட்டி காரணமாக ஒருவர் கட்சி ஆரம்பித்து உள்ளார். மக்களுக்காக அல்ல'', என தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ் பாரதி பேசியதாவது: தி.மு.க., தனது பெருந்தன்மையை பல முறை நிரூபணம் செய்துள்ளது. வரலாறு தெரியாதவர் எல்லாம், நேற்று முளைத்தவர் எல்லாம் சவால் விடுகிறார். எல்லாம் காலக்கொடுமை. ஆனால் ஒன்று, தி.மு.க.,வை எதிர்த்தவர், எதிர்க்க நினைத்தவர் மண்ணோடு மண்ணாகி இருக்கிறார்கள். நான் சாபம் விடவில்லை. வரலாற்றை சொல்கிறேன். தி.மு.க., செய்ததை மக்கள் யாரும் மறந்துவிட முடியாது.
நேற்று ஒருவர் அதிகம் பேசி உள்ளார். மன்னராட்சி என ஒருவர் பேசுகிறார். இது குடியரசு நாடு. தேர்தலில் நின்று மக்கள் ஓட்டுப்போட்டு , பெரும்பான்மை பெறுகிற கட்சி தான் ஆட்சி செய்ய முடியும். இதுகூட தெரியாத முட்டாள்கள் எல்லாம் பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மக்களை சந்தித்து ஓட்டு பெற்று பெரும்பான்மை கட்சி மூலம் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். திராவிடம் என்ற சொல் எங்கும் ஒலிக்கிறது. இதை தாங்கி கொள்ள முடியாத கூட்டம் கண்டபடி பேசுகிறது.தொழில் தகராறு காரணமாக ஒருவர் கட்சி ஆரம்பித்து உள்ளார். இதெல்லாம் உருப்படுமா. மக்களுக்காக ஆரம்பிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு சென்னை ராயப்பேட்டையில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணி உறுதியாக உள்ளது. எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. வி.சி.க., தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கும். கூட்டணி கணக்கு மைனஸ் ஆகாது. அப்படி சொன்னவர்தான் மைனஸ் ஆவார். திரையுலகில் மைனஸ் ஆனதால் தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.