ADDED : அக் 17, 2025 10:46 PM
சென்னை:''தமிழகத்தில், வாடகை கட்டடத்திலும், பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ள, 2,000 துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, சொந்த கட்டடம் படிப்படியாக கட்டி தரப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டசபையில் , தி.மு.க., - நந்தகுமார், அன்னியூர் சிவா ஆகியோரின் கேள்விகளுக்கு, அமைச்சர் அளித்த பதில்:
தமிழகம் முழுதும், 2,000 துணை மற்றும் ஆரம்ப சுகதார நிலையங்கள், வாடகை கட்டடங்களிலும், பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளன. ஏற்கனவே, 1,500 கட்டடங்கள் கட்டி தரப்பட்டுள்ளன. மீதமுள்ள கட்டடங்கள் படிப்படியாக கட்டி தரப்படும்.
மருத்துவ துறையின் உச்சபட்ச அமைப்பே, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் தான். விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உயர்தர சிறப்பு வசதிகளுடன் இயங்கி வருகிறது. மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு, உடனடியாக மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.