ADDED : மே 03, 2024 03:44 PM

சென்னை: மே 6 வரை உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும், மே 7 ல் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தி, ஈரோடு, தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட வட தமிழக உள் மாவட்டங்களில் 10 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் விட அதிகமாக பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கரூரில் 44.3 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 7.5 டிகிரி செல்சியஸ் அதிகம்.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவியது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.மே 6 வரை வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகி உள்ளது. மே 7 ம் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கோடை மழையை பொறுத்தவரை மார்ச் 1 முதல் இன்று வரை பெய்ய வேண்டிய மழையின் அளவு 6 செ.மீ.,பெய்துள்ள மழையின் அளவு 1செ.மீ., இது இயல்பை விட 74 சதவீதம் குறைவு.சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும். இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.