இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: 14 மாவட்டங்களுக்கு மே 1ல் 'ஆரஞ்ச் அலெர்ட்'
இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: 14 மாவட்டங்களுக்கு மே 1ல் 'ஆரஞ்ச் அலெர்ட்'
ADDED : ஏப் 29, 2024 06:19 AM

சென்னை : இன்று(ஏப்.,29) முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகத்தில் கடலோரம் அல்லாத வடக்கு உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 14 மாவட்டங்களுக்கு வரும் 1ம் தேதி வெப்ப அலைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயில் தீவிரமாகியுள்ளது. மாநிலம் முழுதும் கடும் வெயில் வாட்டுவதுடன், வெப்ப அலையும் தாக்குவதால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெயில் உக்கிரமாக உள்ளதால், பகலில் வீட்டை விட்டு, தேவையின்றி வெளியே வர வேண்டாம் என, பொதுமக்களை அரசும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், நான்கு நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில் இன்று முதல், 1ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வடக்கு உள்மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பான அளவை விட 5 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் 43 டிகிரி செல்ஷியஸ், அதாவது 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை நிலவலாம்.
காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, கூடுதலாக உஷ்ணம் உணரப்படும். கடலோரப் பகுதிகளில் காற்றில் 80 சதவீதம் அளவுக்கும், கடலோரம் அல்லாத உள்மாவட்ட பகுதிகளில், 50 சதவீதம் அளவுக்கும் ஈரப்பதம் இருக்கும்.
இன்றும், நாளையும் தமிழக வடக்கு உள்மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். வரும் 1ம் தேதி, வடக்கு உள்மாவட்டங்களில், வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும். 14 மாவட்டங்களுக்கு, வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலெர்ட்டும் விடப்பட்டுள்ளது.
லட்சத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, உஷ்ணம் அதிகமாக உணரப்பட்டு, அசவுகரியமான சூழல் ஏற்படுகிறது. எனவே, வெப்ப அலை வீசும் இடங்களில், குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாற்று திறனாளிகள் போன்றோர், சாலைகளில் சுற்ற வேண்டாம் என, கலெக்டர் அலுவலகங்கள் வழியே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

