கனமழையால் கூரை வீட்டின் சுவர் இடிந்தது; நாகையின் சிறுவன் உயிரிழப்பு
கனமழையால் கூரை வீட்டின் சுவர் இடிந்தது; நாகையின் சிறுவன் உயிரிழப்பு
ADDED : டிச 12, 2024 11:24 AM

நாகை: நாகை மாவட்டத்தில் கனமழையால் சுவர் இடிந்து கவியழகன் என்ற 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று மீண்டும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. செம்பியன் மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ் என்பவரின் கூரை வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முருகதாஸ் அவரது மனைவி, மகள், மகன் கவியழகன் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
பின்னர் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், 4 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மாணவன் கவியழகன் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார். காயம் அடைந்த முருகதாஸ் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கனமழையால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து எட்டாம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.