ADDED : அக் 21, 2025 10:16 PM

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி வழிவதால், நீர்வழித்தடங்கள் ஓரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி, தீவிரமடைந்துள்ளது. நேற்று(அக்.,20) இரவு முதல் இன்று காலை வரை ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், மண்டபம் கலைஞர் தெருவில் உள்ள 60க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்து, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்கள் வெளியேற முடியாமல் முடங்கினர்.
மேலும், பாம்பன் சின்னபாலம், தரவைத்தோப்பு, தங்கச்சிமடம் விக்டோரியா நகர், ராமேஸ்வரத்தில் முனியசாமி கோவில் தெரு, நகராட்சி அலுவலகம் முன், காஸ் கிடங்கு அலுவலகம் அருகில் மழை நீர் குளம் போல் தேங்கியது. ராமேஸ்வரம் கோவில் நான்கு ரதவீதி, லட்சுமண தீர்த்தம் சுற்றிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் தீபாவளியான நேற்று முன்தினம் பலரும் பட்டாசு வெடிக்க, பொருட்கள் வாங்க முடியாமல் வீடுகளில் முடங்கி தவித்தனர்.
காவிரி டெல்டாகாவிரி டெல்டா மாவட்டங்களில், நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வரும் சூழலில், பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளில் முடங்கினர். இதனால் நகர பகுதிகளில் வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 10,000 ஏக்கரில், அறுவடைக்கு தயாரான குறுவை மற்றும் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. திருவாரூரில், 25,000 ஏக்கர் சம்பா பயிர்களும், நாகையில் 50,000 ஏக்கர் சம்பா பயிர்களும், அறுவடைக்கு தயாரான, 1,500 ஏக்கர் குறுவை பயிர்களும், மயிலாடுதுறையில் 1,000 ஏக்கர் குறுவை பயிர்களும், 15,000 ஏக்கர் சம்பா பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லுாரில், பழவாத்தான்கட்டளை வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பால், மழைநீர் வடிய வழியில்லாமல், சோலையப்பன் தெரு, எள்ளுக்குட்டை பகுதியில், 5,000 வாழை, 15 ஏக்கரில் நெல், 5 ஏக்கரில் கரும்பு, 5 ஏக்கரில் தீவனபுல் உள்ளிட்டவை மழைநீர் சூழ்ந்து அழுகும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அணைகள் நிரம்பினமுல்லை பெரியாறு அணையில் 4வது நாளாக தொடர்ந்து மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம், 138.50 அடியாக இருந்த நிலையில், கேரள பகுதிக்கு, 6,003 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முழுதும் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், வரதமாநதி அணை நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரமாநதி அணையில் இருந்து வெளியேறும் நீர் செல்லும் வரட்டாறு, பாலாறு, சண்முகநதி கரையோர பகுதிகளில் உள்ள பழநி, ஆயக்குடி பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்கிறது. மொத்த நீர்மட்டம், 105 அடி என்றாலும், அணை பாதுகாப்பு விதிமுறைப்படி, அக்., மாதத்தில், 102 அடி வரை மட்டுமே நீர் தேக்க முடியும். இதனால் நீர்மட்டம், 102 அடியை எட்டியவுடன் உபரி நீர் திறக்கப்படும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
காலை, 7:௦௦ மணியளவில், 102 அடியை எட்டியவுடன், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. உபரி நீர் போக்கி மதகுகளில் இருந்து, 8,300 கன அடி தண்ணீர்; பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில், 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீர்வரத்து, 9,300 கன அடியாக இருந்தது. உபரி நீர் திறப்பால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி தடுப்பணைக்குள் நுழைய மூன்றாவது நாளாக நேற்றும் தடை தொடர்ந்தது.
சுவர் இடிந்து மாணவி பலி
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி மகள் பவானி, 17; சிவகாசி தனியார் நர்சிங் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவி. திருத்தங்கல்லில் ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில், வீரமணியின் வீடு வாறுகாலை ஒட்டி அமைந்துள்ள நிலையில் சுவர் பலவீனமடைந்துள்ளது. இரு நாட்களுக்கு முன் காலை, 10:00 மணிக்கு பவானி வீட்டில் படுத்திருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 33,500 கனஅடி உபரிநீர் உட்பட, 35,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நடப்பாண்டில், 7ம் முறையாக, நேற்று முன்தினம் மதியம் அணை நிரம்பியது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், நீர்திறப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என்பதால், காவிரி, கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.