ADDED : செப் 29, 2024 01:29 AM
சென்னை:'இன்று 11 மாவட்டங்களிலும், நாளை ஒன்பது மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக உள்பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் இன்று முதல் 4ம் தேதி வரை, ஒரு சில இடங்களிலும்; புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மதுரை, துாத்துக்குடி தவிர்த்து, மற்ற ஒன்பது மாவட்டங்களில், கனமழை பெய்யலாம்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் வடக்கு மற்றும் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்துார், சாத்துார் பகுதிகளில், தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 7; ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் தலா 6; சேலம் ஆனைமடுவு அணைப் பகுதியில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.