ADDED : நவ 12, 2025 01:49 AM
சென்னை: 'திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரை யிலான 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில், 3; சென்னை மாவட்டம் மதுரவாயல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகிய இடங்களில், தலா, 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், வரும், 17ம் தேதி வரை லேசான அல்லது மிதமான மழை தொடரலாம்.
திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

