ADDED : அக் 03, 2025 06:29 AM

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அதே மாவட்டத்தில் செஞ்சி, வளத்தியில் தலா, 2 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று முன்தினம் வலுவடைந்தது. இது, மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அதே பகுதியில் நேற்று நிலவியது.
இது, ஒடிஷாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கில், 160 கி.மீ., துாரத்திலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கு கிழக்கில், 170 கி.மீ., தொலைவிலும் நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8ம் தேதி வரை மிதமான மழை தொடரும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.