ADDED : அக் 14, 2024 04:22 AM

மதுரை: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக தல்லாகுளத்தில், 12 செ.மீ., மழை கொட்டியது.
இதனால், அண்ணாநகர், கே.கே.நகர், கரும்பாலை, கோவில் பாப்பாக்குடி சத்யா நகர் உட்பட தாழ்வானப் பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. கர்டர் பாலம், தத்தனேரி, திருப்பரங்குன்றம் சுரங்கப் பாலத்தில் தேங்கிய மழைநீர், மோட்டார் வைத்து உறிஞ்சப்பட்டு காலை 7:00 மணி முதல் சரிசெய்யப்பட்டது.
புதுக்கோட்டை
அதேபோல, புதுக்கோட்டையிலும் நேற்று முன்தினம் இரவில், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால், நகரமே வெள்ளக்காடாக மாறியது.
புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில், இடையப்பட்டி எனும் பகுதியில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம், சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றன.
ரயில்கள் தாமதம்
கனமழையால், திண்டுக்கல் மாவட்டம், அய்யலுார் தங்கம்மாபட்டி இடையே பள்ளமான பகுதியிலிருக்கும் திண்டுக்கல் -- திருச்சி ரயில் பாதையில் மழைநீர் புகுந்தது. இதனால், அப்பகுதி தண்டவாளத்திலிருந்த ஜல்லிக்கற்கள் அரித்துச் செல்லப்பட்டன.
இரவு ரோந்து ரயில் ஊழியர்கள் கண்டறிந்து ரயில்களை நிறுத்த, ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தனர். இரவு, 11:00 மணிக்கு மேல் இப்பகுதியைக் கடந்து செல்ல வேண்டிய திண்டுக்கல் - திருச்சி, திருச்சி - திண்டுக்கல் என இரு மார்க்க ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பாதையை சீரமைத்த பின் ரயில்கள் குறைந்த வேகத்தில் கடந்தன. இதனால், சென்னை சென்ற பொதிகை, செந்துார், அனந்தபுரி ரயில்கள், அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு வந்த அனந்தபுரி, நெல்லை, முத்துநகர் ரயில்களின் பயண நேரத்தில் தாமதம் ஏற்பட்டது.