ADDED : ஜூன் 18, 2026 06:03 AM

சென்னை: 'தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி உட்பட 13 மாவட்டங்களில், இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், வேலுார் மாவட்டம், மேலாலத்துார் பகுதியில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்கள் முதல், லட்சத்தீவுகள் வரை, வளி மண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
