ADDED : பிப் 21, 2026 06:35 AM

சென்னை: 'தமிழகத்தில் ஆறு தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
பூமத்தியரேகைக்கு அருகில், இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 8:30 மணி அளவில் வலுவிழந்தது. இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, அதே பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே, தமிழக தென் மாவட்டங்களில் சில இடங்கள், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரியில், இன்று பலத்த தரைக்காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன், கனமழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் சில இடங்களில், நாளை இடி, மின்னலுடன், கனமழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

