ADDED : ஜூன் 28, 2026 12:40 AM

சென்னை: 'தமிழகத்தின், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்றும், நாளையும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது.
நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவு பெற்ற, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல், விருதுநகர் மாவட்டம் புல்வாய்க்கரை பகுதிகளில், தலா 4 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
தற்போது, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மேலும், கடலோர ஆந்திராவில் இருந்து, மத்திய மஹாராஷ்டிரா வரை, வடக்கு தெலுங்கானா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணா மலை, விழுப்புரம் மாவட்டங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில், இடி, மின்னல், பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், இடி, மின்னல், பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில், இன்று ஒரு சில இடங்களில் , லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
