தொடர் மழையால் நீலகிரியில் சுற்றுலா மையங்கள் மூடல்; மலை ரயில் சேவையும் ரத்து
தொடர் மழையால் நீலகிரியில் சுற்றுலா மையங்கள் மூடல்; மலை ரயில் சேவையும் ரத்து
ADDED : அக் 22, 2025 11:18 AM

ஊட்டி: தொடர்மழை எதிரொலியாக நீலகிரியில் 5 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளன. மலை ரயில் சேவை 4வது நாளாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுக்கவே பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டு உள்ளது.
கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதோடு மழை பாதிப்பு ஏற்பட்டால் எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர் மழையால் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சுற்றுலா தலமாக நீலகிரியில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. மழை விடாது நீடித்து வருவதால் கடந்த 3 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. தற்போது 4வது நாளாக இன்றும் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில் பாதைகளில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் ரயில் சேவை ரத்து என்று கூறப்பட்டுள்ளது.
தொட்டபெட்டா மலைசிகரம், பைன் மரக்காடுகள், 8வது மைல், வெர்ன்ஹில், அவலாஞ்சி என 5 சுற்றுலா மையங்கள் இன்று (அக்.22) ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. மழை தொடர்ந்து நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
சுற்றுலா மையங்கள் மூடல் என்ற அறிவிப்பு நீலகிரி வந்துள்ள சுற்றுலா பயணிகள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.