நீலகிரியில் கனமழையால் 20 இடங்களில் மண் சரிவு; அணைகளில் நீர்மட்டம் உயர்வு
நீலகிரியில் கனமழையால் 20 இடங்களில் மண் சரிவு; அணைகளில் நீர்மட்டம் உயர்வு
ADDED : மே 26, 2025 12:12 PM

ஊட்டி: நீலகிரியில் கனமழையால் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு ' ரெட் அலர்ட்' அறிவிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம், அனைத்து அரசு துறை அலுவலர்களை ஒன்றிணைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக அவலாஞ்சியில் 350 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
அப்பர்பவானி- 290 மி.மீ.,
எமரால்டு- 180 மி.மீ.,
கூடலுார்- 150 மி.மீ.,
பந்தலுார், 130 மி.மீ.,
20 இடங்களில் மண் சரிவு!
கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக மழை பெய்து வருகிறது. நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஊட்டி-மஞ்சூர் சாலை, எடக்காடு, பிக்கட்டி, தங்காடு ஓரநள்ளி மற்றும் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில், 20 இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நீர் மட்டம் உயர்வு
அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா உள்ளிட்ட அணைகள் மின் உற்பத்தி மற்றும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முக்கிய அணையாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மேற்கண்ட பகுதிகளில் அதிகபட்சம் மழை பதிவாகி இருப்பதால், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களில், 10 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பிற அணைகளிலும் நீர் மட்டம், 5 அடி வரை உயர்ந்துள்ளது.
பல இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மழை பாதிப்பு பகுதிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில் அந்தந்த பகுதியில் உள்ள வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.
கோத்தகிரி சாலை
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே சாலையோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து கீழே சாலையில் விழுந்தது. இதனால் கோத்தகிரி சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர், போலீசார் விரைந்து சென்று, மரக்கிளைகளை இயந்திரங்கள் வாயிலாக வெட்டி எடுத்து, அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.