ADDED : டிச 11, 2024 06:11 AM

சென்னை: தமிழகத்தில், 17 மாவட்டங்களில், இன்று(டிச.,11) கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அது வலுவடைந்துள்ளது; மாலை நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கில், இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இது, தற்போது மெல்ல நகர்வதால், புயலாக மாறுவதற்கான வாய்ப்பு எதுவும், தற்போதைய நிலவரப்படி தெரியவில்லை. இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கும் மிதமான மழை தொடரும்.
இன்று
கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை மிக கனமழை பெய்வதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார், கரூர், கள்ளக்குறிச்சி, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆழ்கடல் பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.