தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை: வெப்பம் குறைந்து மண்ணும், மக்கள் மனமும் குளிர போகுது...!
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை: வெப்பம் குறைந்து மண்ணும், மக்கள் மனமும் குளிர போகுது...!
UPDATED : மே 08, 2024 01:51 PM
ADDED : மே 08, 2024 01:47 PM

சென்னை : தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சமயங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்யும். இன்று காலையே சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இந்நிலையில் இன்று மே 8 முதல் 11ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (மே 8) திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
மே 9ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
மே 10ல் திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.
மே 11ல் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தமட்டில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த கோடை மழை பெய்து, வெப்பத்தை குறைத்து, மண்ணை மட்டுமல்ல மக்களின் மனங்களையும் குளிர வைக்கும் என நம்புவோம்.

