சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
ADDED : அக் 05, 2025 05:18 PM

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பிற்பகலுக்கு பிறகு பெய்யும் மழையினால், வெப்பம் கணிசமாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சென்னை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்புவில் இருந்து 149 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. மேலும், 20 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. இதனால், விமானப் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.