விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை
ADDED : நவ 30, 2024 11:38 PM

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து உள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
திண்டிவனம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. .திண்டிவனம்-புதுச்சேரி சாலையில், மரக்காணம் கூட்ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக மழைநீர் வெள்ளம் போல் தேங்கியருந்தது. திண்டிவனம் - மரக்காணம் கூட்ரோட்டில் தேங்கியிருந்த மழை நீர், நகராட்சி மூலம் அகற்றப்பட்டது.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில்மின்சார சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. வானூரில் அதிக பட்சமாக 24 மணி நேரத்தில் 23 செமீ மழை பதிவாகி உள்ளது, விக்கிரவாண்டி பகுதியில் பெய்த மழை காரணமாக வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. விக்கிரவாண்டியில் 11 செமீ மற்றும் திண்டிவனத்தில் 10 செமீ மழை பதிவாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.