குப்பை அகற்றும் பிரச்னைக்குஇதோ இருக்கு தீர்வு! சுகாதார ஆய்வாளர்கள் ஐடியா
குப்பை அகற்றும் பிரச்னைக்குஇதோ இருக்கு தீர்வு! சுகாதார ஆய்வாளர்கள் ஐடியா
ADDED : செப் 24, 2026 05:14 AM

கோவை: வீடு வீடாகச் சென்று தரம் பிரித்து சேகரித்தாலும், மாநகராட்சியில் குப்பை பிரச்னை தீர்ந்தபாடில்லை. மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கும் போதுமான வரவேற்பு இல்லை. துாய்மை பணியாளர் எண்ணிக்கையை அதிகரித்து, முழு நேர பணியாக செய்வது உட்பட நிறைய ஆலோசனையை அள்ளித்தருகின்றனர் சுகாதார ஆய்வாளர்கள்.
மாநகராட்சியில் தினமும் 1200 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை இரண்டாக பிரித்து வாங்கவே துாய்மை பணியாளர்கள் சிரமப்படும் நிலையில், இப்போது நான்காக பிரிக்க வேண்டும் என்கின்றனர்.
குப்பை தொட்டிகளையும் அகற்றி விட்டதால், இரவிலும், போகிற போக்கிலும் தெருவோரம் வீசப்படும் பிரிக்கப்படாத குப்பை மூட்டைகள் அதிகரித்து விட்டன.
இதற்கு என்ன தான் தீர்வு? சுகாதார ஆய்வாளர்கள் சிலரிடம் நமது நிருபர்கள் பேசினர். அவர்கள் தெரிவித்த சில கருத்துக்கள்:
l இவ்வளவு பெரிய நகரில் குப்பையை மேனேஜ் செய்ய, ஆட்கள் போதாது. 'மைக்ரோ லெவலில்' அணுக வேண்டும். 600 வீடுகளுக்கு ஒரு கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டும்.
l எத்தனை வீடுகள் இருக்கின்றன, எத்தனை பேர் வசிக்கின்றனர் என்கிற விவரம் மாநகராட்சியிடம் துல்லியமாக இருக்கிறது. அதற்கேற்ப ஊழியர்களை நியமிக்க வேண்டும். * ஏதேனும் ஒரு பகுதிக்கு துாய்மை பணியாளர் வேலைக்கு வரவில்லை என்றால், வேறு ஆளை அனுப்ப வேண்டும். 10 சதவீத ஊழியர்கள் 'ரிசர்வ்' முறையில் தயாராக இருக்க வேண்டும்.
l வாரத்தில் ஏழு நாட்களும் குப்பை அள்ள வேண்டும். ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு தரலாம். குப்பை வாகனம் பழுதானால், வேறு வாகனம் அனுப்ப வேண்டும்; ஒப்பந்தப்படி, 10 சதவீத வண்டி தயாராக வைத்திருக்க வேண்டும்.
l குப்பை சேகரிப்பு குறைகேட்பு மையம் அமைக்க வேண்டும். லாரியில் ஜி.பி.எஸ். கருவி இயங்குகிறதா; வழக்கமான ரூட்டில் செல்கிறதா; குப்பை அள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
l குப்பை அள்ளுவது பகுதி நேர வேலை அல்ல. முழு நேரமும் தொடர வேண்டும். எந்த இடத்திலும் குப்பை தேங்காததை உறுதி செய்ய வேண்டும். 2 ஷிப்ட், 3 ஷிப்ட் என வேலை நேரத்தை மாற்றலாம். ஊக்கத்தொகை கொடுக்கலாம்.
l வீடுகளில் குப்பை எடுப்போரை ஓட்டல்களிலும் எடுக்கச் சொன்னால், ஒரே டிரிப்பில் லாரி லோடாகி விடும். மீதமுள்ள வீடுகளில் எடுக்க முடியாது. லாரி கிடங்கிற்கு சென்று வருவதற்குள் வீட்டில் இருப்பவர்கள் வேலைக்கு சென்று விடுவர். அதனால், ஒவ்வொரு செக்டராக பிரித்து சேகரிப்பதே தீர்வு.
l மக்கும் குப்பையை தினமும் சேகரிக்கலாம். மக்காத குப்பையை வாரத்தில் ஒரு நாள் சேகரித்தால் போதும். கேரளத்தில் பின்பற்றப்படும் இந்த நடைமுறை, குப்பையை எளிதாக பிரிக்க உதவும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
ம.பி.யின் இந்துார் மாநகராட்சியில், குப்பை மேலாண்மை மிகச்சிறப்பாக செயல்படுகிறது. நம்மூரில் இருப்பதை போல, அங்கும் 22 லட்சம் மக்கள் தொகையே இருக்கிறது. அங்கு போய் பார்த்து வந்து பின்பற்றினால் பிரச்னைகள் தீர்ந்து விடும் என்றும் சில சுகாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
