அங்கித் திவாரியிடம் விசாரிக்க அமலாக்கத்துறை மனு உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு
அங்கித் திவாரியிடம் விசாரிக்க அமலாக்கத்துறை மனு உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு
ADDED : பிப் 15, 2024 09:19 PM
மதுரை:திண்டுக்கல் அரசு டாக்டரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2018 ல் வழக்கு பதிந்தனர்.
மதுரை அமலாக்கத்துறை இயக்குனரக தென்மண்டல துணை இயக்குனர் அலுவலக அதிகாரி அங்கித் திவாரி அலைபேசியில்,'சொத்துக் குவிப்பு தொடர்பாக உங்களுக்கு எதிராக புகார் வந்துள்ளது. விசாரிக்க வேண்டும்' என சுரேஷ்பாபுவிடம் தெரிவித்தார்.
வழக்கை முடிக்க அங்கித் திவாரி 50 லட்சம் ரூபாய் பேரம் பேசினார். சுரேஷ்பாபு முதல் தவணையாக 2023 நவ., 1ல் 20 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
மீதியை கொடுக்க விருப்பமின்றி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
போலீசார் தெரிவித்தபடி 20 லட்சம் ரூபாயை அங்கித் திவாரியிடம் டிச.,1ல் கொடுத்தார். அத்தொகையுடன் காரில் சென்ற அங்கித் திவாரியை பின் தொடர்ந்த போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. அவரிடம் விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தாக்கலான மனு தள்ளுபடியானது.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கலானது.
இது விசாரணைக்கு ஏற்புடையதா என்பதை முடிவு செய்ய நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு முன் பட்டியலிடப்பட்டது. நீதிபதிகள் பிப்., 20க்கு ஒத்திவைத்தனர்.