பிரபல சமையல் கலைஞருக்கு மரபணு சோதனை உயர் நீதிமன்றம் அனுமதி
பிரபல சமையல் கலைஞருக்கு மரபணு சோதனை உயர் நீதிமன்றம் அனுமதி
ADDED : மார் 05, 2026 03:42 AM

சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு, மரபணு பரிசோதனை நடத்த அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில், 'மாதம்பட்டி பாகசாலா' நிறுவனத்தையும் குறிப்பிட்டு இருந்தார்.
இதை எதிர்த்து, மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா இடையிலான பிரச்னைக்கு தீர்வு காண, மத்தியஸ்தம் செய்ய, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷை நியமித்தது.
வழக்கு விசாரணையின் போது, தன் குழந்தையின் தந்தை ரங்கராஜ் என நிரூபிக்க, அவருக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என, ஜாய் கிரிசில்டா தரப்பிலும், மரபணு பரிசோதனைக்கு தயார் என, ரங்கராஜ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, மனு தாக்கல் செய்ய, நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜாய் கிரிசில்டா, ரங்கராஜ் தரப்பில், மரபணு பரிசோதனை நடத்த அனுமதி கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை ஏற்ற நீதிபதி, மாதம்பட்டி ரங்கராஜுக்கு, மரபணு பரிசோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தடயவியல் துறையையும், ஆய்வகத்தையும் தொடர்பு கொண்டு, ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், பரிசோதனைக்கு பின் அறிக்கையை பெற்று, அதை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்கவும், வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிட்டு, மார்ச் 30ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

