பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி வீடுகள் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஐகோர்ட் தடை
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி வீடுகள் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஐகோர்ட் தடை
ADDED : நவ 01, 2025 01:02 AM

சென்னை:'பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று கூறப்படும் பகுதியில், எந்த கட்டுமான பணிகளையும் தனியார் கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
'ராம்சார்' தளமாக அங்கீகரிக்கப்பட்ட சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், விதிகளை மீறி பன்னடுக்கு குடியிருப்புகள் கட்ட, 'பிரிகேட்' என்ற தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மனு தாக்கல் அதை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க., சென்னை புறநகர் வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலர் பிரெஷ்நேவ் என்பவர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில் கூறியுள்ளதாவது:
பெரும்பாக்கம் கிராமத்தில் நான்கு பிளாக் கொண்ட பன்னடுக்கு குடியிருப்புகள் கட்ட, பிரிகேட் நிறுவனம் கடந்த ஜன., 1ல், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
இந்த உத்தரவு பெற்ற மூன்று நாட்களுக்குள், சதுப்பு நிலப்பகுதி என தெரிந்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அனுமதி அளித்துள்ளது; இது, சட்ட விரோதம்.
எனவே, தனியார் நிறுவனத்துக்கு வழங் கிய அனுமதியை ரத்து செய்து, தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, ''ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்ட பகுதியில், கட்டுமானத்துக்கு தடை உள்ளது. இருப்பினும், எந்த ஆய்வும் செய்யாமல் தனியார் நிறுவனத்துக்கு 1,400 குடியிருப்புகள் கட்ட, சி.எம்.டி.ஏ., அனுமதி வழங்கி உள்ளது. இது சட்ட விரோதம்,'' என கூறி, சதுப்பு நிலம் தொடர்பான வரைபடங்களை தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடியதாவது:
மனுதாரர் கூறும் ஒட்டு மொத்த பகுதியும் சதுப்பு நிலம் அல்ல. கட்டுமானம் அமையும் பகுதி சதுப்பு நிலத்துக்கு வெளியில் உள்ளது.
எல்லை நிர்ணயம் சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், செயற்கைக்கோள் புகைப்படங்கள் உதவியுடன், சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகள் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும். தற்போது கட்டப்படும் கட்டடத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. அதன்பிறகே, சி.எம்.டி.ஏ., அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பான விஷயத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கவனத்தில் எடுத்து, மாநிலத்தில் உள்ள சதுப்பு நிலங்களை ஆய்வு செய்து அடையாளம் காணும்படி உத்தரவிட்டு உள்ளது; இந்த விவகாரத்தில், பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயமும் தாமாக முன்வந்து, வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பித்து உள்ளதுநிலங்களை கண்டறியும் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.
வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த விபரங்கள் தெரியாமல், நிலத்தை மாற்றியமைத்து கட்டுமான பணிகளை தொடர, கட்டுமான நிறுவனத்துக்கு சி.எம்.டி.ஏ., எப்படி அனுமதி வழங்கியது?
சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக வரையறுக்கும் பணிகள் நிறைவு பெறும் முன், கட்டுமானங்கள், வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி அளித்து வந்தால், ஒட்டுமொத்த சதுப்பு நிலமும் அழிந்து விடும்; இது, மிகவும் தீவிரமான விஷயம்.
இந்த விஷயத்தை, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது. வழக்கில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கிடையில், தனியார் கட்டுமான நிறுவனம், திட்டத்தை முடிக்க வேகம் காட்டுகிறது.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் வரையறுக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். அதுவரை, சம்பந்தப்பட்ட சதுப்பு நில பகுதியில், தனியார் கட்டுமான நிறுவனம் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனுவுக்கு, வரும் 12ம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

