ஜாமின் கோரி ஜாபர் சாதிக் ஐகோர்ட்டில் வழக்கு: விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்
ஜாமின் கோரி ஜாபர் சாதிக் ஐகோர்ட்டில் வழக்கு: விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்
UPDATED : டிச 21, 2024 10:57 PM
ADDED : டிச 21, 2024 04:56 PM

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க., பிரதிநிதியாக இருந்த ஜாபர் சாதிக் , அவரின் சகோதரர் இருவரின் ஜாமின் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால், கடந்த மார்ச்சில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, சகோதரர் முகமது சலீம், திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் மீது, அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் தரப்பில் ஜாமின் கோரி, கூடுதல் சி.பி.ஐ., நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை சார்பில், ஆஜரான வழக்கறிஞர், 'இருவரின் ஜாமின் மனுவை கடந்த 19ம் தேதி மாலை சி.பி.ஐ., நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், அதற்கு முன்பாகவே, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' எனக்கூறினார்.
இதனையடுத்து மனு நிலுவையில் உள்ள போது எப்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டது? எனக்கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.