நீதிமன்ற தடையுத்தரவை மீறி 'நோட்டீஸ்': அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்
நீதிமன்ற தடையுத்தரவை மீறி 'நோட்டீஸ்': அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்
ADDED : ஜூலை 24, 2025 05:26 AM

சென்னை: அமலாக்கத் துறை நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், 'டாஸ்மாக்' வழக்கில், 'நோட்டீஸ்' அனுப்பியதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
'டாஸ்மாக்' கொள்முதல் முறைகேடு தொடர்பாக, கடந்த மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்தனர்.
இதற்கு எதிராக, ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, 'எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும், எந்த அதிகார வரம்பும் இல்லை. பறிமுதல் செய்த பொருளை ஒப்படைக்க வேண்டும்' என, ஜூன் 20ல் உத்தரவிட்டு, அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்கால தடை விதித்தனர்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், விக்ரம் ரவீந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, 'மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, இந்த நீதிமன்றம் தடை விதித்த பின்னும், டில்லியில் உள்ள, 'அட்ஜுடிக்கேட்டிங் அத்தாரிட்டி' மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்பு' என, மூத்த வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.
அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் என்.ரமேஷ் வாதாடியதாவது:
கடந்த ஜூன் 20ல் நீதிமன்றம் தடை விதித்தது. அதற்கு முன்பே, மனுதாரரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், டில்லியில் உள்ள அட்ஜுடிக்கேட்டிங் அத்தாரிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை அமலாக்கத் துறை வசம் ஒப்படைக்கலாமா அல்லது மனுதாரரிடம் திருப்பிக் கொடுக்கலாமா என்பது குறித்து, அட்ஜுடிக்கேட்டிங் அத்தாரிட்டி முடிவு செய்யும்.
அதற்காக, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது, தடை உத்தரவு பிறப்பிக்கும் முன் எடுக்கப்பட்ட நடவடிக்கை. நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'அமலாக்கத் துறை ஒவ்வொரு முறையும் இதுபோல செயல்பட்டதால்தான் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தோம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும், இதுபோல நோட்டீஸ் அனுப்பியதை ஏற்க முடியாது; இது கண்டனத்துக்குரியது.
மனுதாரர் விரும்பினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்' என தெரிவித்து, வழக்கை ஆக., 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.