அரசியல், பண பலத்தால் ஆட்டம் போடும் மணல் கொள்ளை கும்பல்: ஐகோர்ட் கண்டனம்
அரசியல், பண பலத்தால் ஆட்டம் போடும் மணல் கொள்ளை கும்பல்: ஐகோர்ட் கண்டனம்
ADDED : டிச 18, 2025 12:02 AM

சென்னை: அரசியல், பண பலத்தை வைத்து, மணல் கொள்ளை கும்பல், 'மாபியா' போல் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியைச் சேர்ந்தவர் நடேசன்; நெக்குந்தி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜி.பி.எஸ்., கருவி இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோத மணல் மற்றும் கனிமவளங்கள் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுரங்கத் துறை இயக்குநர் மோகன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'மணல் உள்ளிட்ட கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு, ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நிறைவு பெறும்.
கடந்த 2020 முதல், 2025ம் ஆண்டு நவம்பர் வரை மொத்தம் 1,439 சட்ட விரோத குவாரிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவை தொடர்பாக, 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது நீதிபதிகள், 'எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட விபரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை? சட்ட விரோதமாக 5 கோடி ரூபாய்க்கு கனிமவளம் கொள்ளை அடிக்கப்படும் நிலையில், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது' என, கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:
அரசியல், பண பலத்தை வைத்து, கனிமவள கொள்ளை கும்பல், 'மாபியா' போல் செயல்படுகிறது. மணல், கனிமவள கொள்ளையை தடுப்பது, சம்பந்தப்பட்ட கலெக்டர்களின் பொறுப்பு.
இது தொடர்பாக புகார் அளிக்காத வருவாய் துறை அதிகாரிகள் மீது, கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திடீர் ஆய்வு மணல் மற்றும் கனிமவள கொள்ளை குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
அரசின் அறிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், இதை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சட்ட விரோத மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுக்க, அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

