ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்; தடை கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்; தடை கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 04, 2025 04:56 AM

மதுரை: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்திற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் (பிப்ரவரியில்) தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி (பிப்.25ல்) மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம், சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என ஏற்கனவே உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளன. அதை மீறுவது சட்டவிரோதம். வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
பிப்.24ல் விசாரணையின்போது இரு நீதிபதிகள் அமர்வு, 'ஜாக்டோ-ஜியோ சார்பில் எவ்வித வேலை நிறுத்தத்திலும் ஈடுபடக்கூடாது,' என இடைக்கால தடை விதித்தது.
நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: சட்டப்படி உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று போராட்டம் நடத்தலாம்.
ஏதாவது சட்டவிரோத செயல்கள், அசம்பாவிதம் நடந்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம். மக்களின் அடிப்படை உரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டது.