கவனக்குறைவான சிகிச்சையில் பெண் மரணம் குற்றப்பத்திரிக்கை ரத்து கோரும் டாக்டர் மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
கவனக்குறைவான சிகிச்சையில் பெண் மரணம் குற்றப்பத்திரிக்கை ரத்து கோரும் டாக்டர் மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 19, 2025 02:49 AM
மதுரை:கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே செம்பொன்கரை கணேசன். இவரது மனைவி ருக்மணி 34. டெய்லர். இவர்களுக்கு 2 குழந்தைகள். குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 2011 மார்ச் 18 ல் ருக்மணி அனுமதிக்கப்பட்டார்.
மார்ச் 19ல் ஆப்பரேஷன் தியேட்டரில் அவருக்கு, ஆக்சிஜனுக்கு பதிலாக கவனக்குறைவாக நைட்ரஸ் ஆக்சைடு செலுத்தியதால், சுயநினைவை இழந்தார்.
உயர்நீதிமன்றக் கிளை உத்தரவுப்படி, மதுரை அரசு மருத்துவமனையில் ருக்மணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின் வேலுார் சி.எம்.சி.,மருத்துவமனைக்கு ருக்மணி மாற்றப்பட்டார். அவர் 2012 மே 4 ல் இறந்தார். இழப்பீடு கோரி கணேசன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். ரூ.28 லட்சத்து 37 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு 2016 ல் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
சம்பவத்தின்போது மயக்கமருந்து டாக்டராக பணிபுரிந்த ரவீந்திரன், சுவாச காஸ் சிலிண்டர் விநியோக நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் பர்னபாஸ் உள்ளிட்ட சிலர் மீது ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
ரவீந்திரன் உட்பட 12 பேர் மீது கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அதை ரத்து செய்யக்கோரி ரவீந்திரன், பர்னபாஸ், விவேகானந்தன் உட்பட 6 பேர் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்:
சாட்சிகளின் வாக்குமூலம், போலீசாரால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது, காஸ் விநியோகிப்போர், மருத்துவமனை நிர்வாகம் மாறி,மாறி மற்றொருவரை குற்றம் சாட்டுகின்றனர். வாக்குமூலத்தில் முரண்பாடுகள் உள்ளன.
சம்பந்தப்பட்ட நேரத்தில் காஸ் நிறுவனத்திற்கு உரிமம் இல்லை. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உரிமம் இல்லாத நிறுவனத்திடம் மருத்துவமனை நிர்வாகம் காஸ் வாங்கியுள்ளது.
உயிரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் டாக்டர்கள் மேற்கொள்வார்கள் என நோயாளிகள் நம்புகின்றனர். டாக்டர் தரப்பில் மிகுந்த பொறுப்பு, அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. மயக்க மருந்து நிபுணரின் விஷயத்தில் இது மிகவும் அதிகமாக உள்ளது. மயக்க மருந்தை தவறாக நிர்வகிப்பது உடல் ரீதியான பாதிப்பை மட்டுமல்ல, மனரீதியான சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
இவ்வழக்கில் இறந்தவர் 411 நாட்கள் சிரமப்பட்டார். கவனக்குறைவால் சம்பவம் நடந்துள்ளது. யாருடைய கவனக்குறைவு என்பது விசாரணையின் போது மட்டுமே தீர்மானிக்கப்படும். இந்நீதிமன்றம் அதைத் தீர்மானிக்க முடியாது.
கீழமை நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களையும் எழுப்பலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கீழமை நீதிமன்றம் 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.