'கூல் லிப்' போதைபொருளை கட்டுப்படுத்த வழிகாட்டும் உயர் நீதிமன்றம்
'கூல் லிப்' போதைபொருளை கட்டுப்படுத்த வழிகாட்டும் உயர் நீதிமன்றம்
ADDED : அக் 31, 2024 04:42 AM

மதுரை: 'கூல்லிப்' உள்ளிட்ட புகையிலை பொருட்கள் புதிய வடிவில் வெளிவருகின்றன. அவை குழந்தைகளை கவர்கின்றன. மோசமான நிலைமை கருதி, உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம், காளத்திமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜா. தடை செய்யப்பட்ட 'கூல்லிப்' புகையிலை போதைப்பொருளை பெங்களூருவிலிருந்து கடத்தி வந்ததாக கடையம் போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான ஆனஸ்ட் ராஜா ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் அல்லது குழந்தைகளுக்கு விற்க முயன்றால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். அது ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தால், சம்பந்தப்பட்ட பணியாளர், நிறுவன இயக்குனர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்.
சட்டப்பூர்வ எச்சரிக்கை படம், வாசகம் தயாரிப்பின் மீது இடம்பெறவில்லை எனில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலை பொருட்கள் இல்லாத கல்வி நிறுவனங்களாக மாற்ற வழிகாட்டுதல்களை செயல்படுத்த வேண்டும்.
புகையிலை அல்லது நிகோடின் கறைகளை கண்டறிய அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் குறைந்தபட்சம், 2 முறை பல் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
முடிந்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகளுக்கு புகையிலை விழிப்புணர்வு மையம் நிறுவ வேண்டும். போதைக்கு அடிமையான குழந்தைகளுக்கு ஆலோசனை, சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர், தன்னார்வலர் கொண்ட கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும்.
குழந்தைகளின் மன உறுதியை பாதிக்காத வகையில், அவர்களின் பைகளை கவனமாக பரிசோதிக்கும் வகையில் சுற்றறிக்கையை வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்யலாம். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க மத்திய அரசிற்கு அதிகாரம் உள்ளது. அதை நிறைவேற்ற மாநில அரசுகள் கடமைப்பட்டுள்ளன. புகையிலை பொருட்கள் புதிய வடிவில் தயாரித்து வெளிவருகின்றன. அவை குழந்தைகளை கவர்கின்றன.
மோசமான நிலைமையை கருத்தில் கொண்டு, உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.மனுதாரருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.