ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட்
ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட்
ADDED : டிச 24, 2024 06:58 PM

சென்னை: திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
சில தினங்களுக்கு முன், வி.சி., தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கூறப்பட்ட தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்தார்.
அதில், கூறியிருந்ததாவது: துணை முதல்வர் உதயநிதி, மூன்று பிராண சன்னியாசிகளான ஜீயர்களை தன் வீட்டிற்கு அழைத்து, கால்களை கழுவி பாத பூஜை செய்துள்ளார். அந்த தீர்த்தத்தை பருகி ஆசி பெற்று, அவர்களுக்கு உணவிட்டு வெகுமதி அளித்து வழி அனுப்பி இருக்கிறார். பிராமணர்களை இழிவுபடுத்தியதற்காகவும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் இதைச் செய்துள்ளார். நீங்கள் என்னடான்னா, இரண்டு சீட்டுக்கு பிளாஸ்டிக் சேர்ல உட்கார்ந்து, கைகட்டி, வாய் பொத்தி இருந்துட்டு, அரசியலுக்காக சனாதனத்தை இழுப்பது கேவலமாக இல்லையா.உங்கள் கட்சி அழுத்தத்திற்கு ஆளாகி விட்டு, சனாதனத்தை குடைய பார்த்தால், பிறகு உதயநிதிக்கு கோபம் வந்து, அடுத்த தேர்தலில், ஒரு சீட் தான் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்; யோசித்து எழுத வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.
ரங்கராஜன் நரசிம்மன் பதிவுக்கு, ஜீயர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மனை டிச.,15ல் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து, அவரது மகன் முகுந்தன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் ' சட்ட விதிகளை பின்பற்றாமல் தனது தந்தை கைது செய்யப்பட்டா்' எனக் கூறியிருந்தார்.ஆனால் போலீசார் சா்பில் ஆஜரான வழக்கறிஞர், ' விதிகளை பின்பற்றித் தான் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது' எனக்கூறியிருந்தனர்.
இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், அரசியல் தலைவர்கள், மடாதிபதிகள் பற்றிபேசக்கூடாது என்ற நிபந்னையின் பேரில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.