திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் விதிமீறல் சங்கங்களின் பதிவாளருக்கு ஐகோர்ட் கெடு
திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் விதிமீறல் சங்கங்களின் பதிவாளருக்கு ஐகோர்ட் கெடு
ADDED : ஜன 03, 2026 06:54 AM

சென்னை: 'தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் நடந்த விதி மீறல்கள் தொடர்பான புகாரை, இரண்டு மாதங்களுக்குள் சட்டப்படி விசாரித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என, மாவட்ட சங்கங்களின் பதிவாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் தேர்தல், பிப்., 22ல் நடக்க உள்ளது. தேர்தல் அதிகாரியாக, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதை எதிர்த்து, விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த, ராஜேஸ்வரி வேந்தன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'சங்க சட்ட விதிகளை மீறி, தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். செயற்குழு மற்றும் பொதுக்குழு நடத்தப்பட்டு உள்ளது.
'இந்த விதிமீறல்கள் குறித்து, பதிவுத்துறை ஐ.ஜி., மாவட்ட சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு, கடந்த டிச., 15ல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
'அந்த புகார் மனுவை விசாரித்து, 2026--, 2029ம் ஆண்டுக்கான பொதுக்குழு மற்றும் தேர்தலை, துணை விதிகளின்படி நியாயமாக நடத்த, பார்வையாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
உத்தரவு இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் தாக்ஷாயனி ரெட்டி, வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் ஆகியோர் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ''மனுதாரரின் புகார் மனு தொடர்பாக, மாவட்ட சங்கங்களின் பதிவாளர், இரண்டு மாதங்களுக்குள் சட்டப்படி விசாரித்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.

