கோவில் நிதியில் திருமண மண்டபம் கட்டும் அரசாணை ரத்து: ஐகோர்ட்
கோவில் நிதியில் திருமண மண்டபம் கட்டும் அரசாணை ரத்து: ஐகோர்ட்
ADDED : ஆக 20, 2025 03:02 AM
மதுரை:கோவில் நிதி வாயிலாக திருமண மண்டபங்கள் அமைக்கும் அரசாணைகளை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்தது.
மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக் குமார் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோவிலான வாகீஸ்வரர் கோவில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், 22 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் திருமண மண்டபங்கள் அமைக்க, தமிழக அறநிலையத்துறை, 2023 மார்ச் 3ல் அரசாணை வெளியிட்டது.
அனுமதி பெறவில்லை இப்பணியை, அந்தந்த கோவில் நிதி வாயிலாக மேற்கொள்ள அனுமதிக்கப் பட்டு ள்ளது.
திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் அமைக்கப்படுகிறது. இதற்கு, மாநகராட்சியிடம் கட்டட அனுமதி பெறவில்லை.
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவில்.
வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், 6 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் திருமண மண்டபம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அறநிலை யத்துறை, மே 16ல் அரசாணை வெளியிட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபரி நிதியிலிருந்து தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கம்பராய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், 3 கோடியே 75 லட்சத்தில் திருமண மண்டம் அமைக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பானவை உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் மற்றும் நரசிங்க பெருமாள் கோவில் நிலத்தில், 4 கோடியே 54 லட்சத்தில் திருமண மண்டபம் அமைக்க, 2024 டிசம்பரில் அறநிலையத்துறை முதன்மை செயலர் அரசாணை வெளியிட்டார்.
இவை அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானவை. கோவில் நிதியை ஹிந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச்சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், ஹிந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு, ஹிந்து
தொடர்ச்சி 7ம் பக்கம்
கோவில் நிதியில்...
முதல் பக்கத் தொடர்ச்சி
குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களை நிறுவுதல், பக்தர்களின் நலனிற்காக மருத்துவமனைகள், மருந்தகங்களை அமைக்க பயன்படுத்த வேண்டும். திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணையில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், 'ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் கோவில்களில் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் திருமண மண்டபங்கள் அமைக்கப்படுகின்றன. அதற்கு மிகக்குறைந்த தொகை வாடகையாக வசூலிக்கப்படுகிறது. அத்தொகை கோவில் பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில், வணிகநோக்கம், விதிமீறல் இல்லை' என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கோவில் நிதி என்பது அரசின் பொது நிதி அல்ல. பக்தர்கள், நன்கொடையாளர்கள் வழக்கும் நிதிதான். அதை அன்னதானம், பிரசாதம் வழங்குதல், கோவில் மேம்பாடு உள்ளிட்ட மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம். இதில் அனைத்து மதங்களும் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுகின்றன.
மதச்சார்பற்ற அரசு கோவில் நிதியிலிருந்து, வணிக நோக்கில் திருமண மண்டபம், வணிக கட்டடங்கள் அமைப்பது ஏற்புடையது அல்ல. வாடகைக்கு விடும் நோக்கில், கோவில் நிதியில் திருமணம் மண்டபங்கள் அமைப்பது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது. கோவில்கள் கலாசாரம், கட்டடக்கலையின் அடையாளமாக திகழ்கின்றன. அவற்றிற்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோவில்களை மேற்பார்வையிட்டு முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது.
மத நடைமுறைகள், பழக்கவழக்கங்களில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. கோவில் நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என அந்தந்த கோவில் நிர்வாகங்கள் தான் முடிவெடுக்க இயலும்.
சட்டசபையில் அரசு அறிவிப்பு வெளியிட்டதன் அடிப்படையில் கோவில் நிதியில் திருமண மண்டபங்கள் அமைக்க அறநிலையத்துறை வெளியிட்ட அரசாணைகள் ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.
கோவில் நிதியில் வணிக வளாகம், கல்வி நிறுவனம், திருமண மண்டபங்கள் அமைக்கும் அரசாணைக்கு எதிராக நிலுவையிலுள்ள பிற வழக்குகளில், மனுதாரர்கள் தரப்பிற்கு அரசாணையின் நகல் வழங்கவும் அரசு தரப்பிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.