எஸ்.ஐ., தேர்விற்கு எதிராக வழக்கு ; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
எஸ்.ஐ., தேர்விற்கு எதிராக வழக்கு ; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : பிப் 03, 2026 05:52 AM

மதுரை: எஸ்.ஐ., தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்த தாக்கலான வழக்கில் தேர்வு முடிவை திரும்ப பெற்றதற்கான காரணம் குறித்து சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தென்காசி குருசாமி, ஆனந்தராஜா தாக்கல் செய்த மனு: போலீஸ் எஸ்.ஐ., பணியிடங்களுக்கான தேர்வு 2025 டிச., 21ல் நடந்தது. பிரிவு 'பி' பகுதி யில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு தமிழ் வினாக்கள் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக உளவியல் பகுதியிலிருந்து 10 வினாக்கள் கூடுதலாக இடம் பெற்றன. இது ஏற்புடையதல்ல. எஸ்.ஐ., தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழிலிருந்து 10 வினாக்கள் இடம்பெறும் என குறிப்பிட்டிருந்த நிலையில், தமிழிலிருந்து வினாக்கள் இடம்பெறவில்லை. தேர்வு முடிவு 'கட்-ஆப்' இல்லாமல் வெளியிடப்பட்டு உள்ளது. இது ஏற்புடையதல்ல.
அரசு தரப்பு: தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் தவறு இருந்ததால், அது திரும்ப பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தேர்வு முடிவு வெளியிட்டதை திரும்ப பெற்றதற்கான காரணம் குறித்து தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தரப்பில் பிப்., 4 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

