ADDED : ஜன 25, 2024 01:49 AM
சென்னை:உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு கவுன்சிலிங்கிற்கு, 'நீட்' தகுதி மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கு பின், டி.எம்., - எம்.சி.ஹெச்., - டி.என்.பி., உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதிக்கான, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு வாரியம் வாயிலாக, கடந்தாண்டு செப்., 29, 30ம் தேதிகளில் தேர்வு நடந்தது.
அதற்கான முடிவுகள் அக்., 15ம் தேதி வெளியிடப்பட்டது. உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுதும், 5,000 இடங்களுக்கு மேல் உள்ள நிலையில், அதற்கான கவுன்சிலிங்கில் பெரும்பாலான இடங்கள் நிரம்பவில்லை.
இதையடுத்து, சிறப்பு கவுன்சிலிங் வாயிலாக அதனை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்காக நீட் தேர்வு தகுதி மதிப்பெண் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், முதுநிலை மருத்துவ படிப்புக்கு பின், நீட் தேர்வு எழுதியவர்கள், சிறப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, https://mcc.nic.in என்ற இணையதளங்களை பார்வையிடலாம்.