உயர் விளைச்சல் அரிசி ரகங்கள் தமிழகத்தில் அறிமுகம்: அபூர்வா
உயர் விளைச்சல் அரிசி ரகங்கள் தமிழகத்தில் அறிமுகம்: அபூர்வா
ADDED : பிப் 21, 2024 03:03 AM

மண் வளம் முதல் மக்கள் நலன் வரை கருத்தில் வைத்து, வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக, வேளாண் துறை செயலர் அபூர்வா கூறினார்.
அவர் கூறியதாவது:
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, இயற்கை விவசாய மாதிரி பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன.
ரூ.10 கோடி
பிற மாநிலங்களில் உயர் விளைச்சல் தரும் அரிசி ரகங்களை பிரபலப்படுத்தவும், திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
மொத்தமாக சொல்வது என்றால், மண் வளம் முதல் மக்கள் நலன் வரை கருத்தில் வைத்து, இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
வேளாண் துறையில் விதைப்பு முதல் அறுவடை வரை, பணிகளை செய்வதற்கு இயந்திரங்கள் உள்ளன.
அதேபோன்று, தோட்டக்கலை துறையை இயந்திரமயமாக்க வேண்டும். இதற்காக, மற்ற நாடுகளுடன் இணைந்து, இயந்திர கண்காட்சி நடத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, குறிஞ்சி, நெய்தல் பகுதிகளுக்கு தோட்டம் உள்ளது. இதேபோல, முல்லை, மருதம் பூங்கா அமைக்கப் போகிறோம்.
விவசாயிகளிடம் பொருட்களை கொள்முதல் செய்து, ஒரு பெயரை சூட்டி, விற்பனை செய்ய, முதற்கட்டமாக 100 இடங்களில் உழவர் அங்காடிகள் திறக்கப்படவுள்ளன. இதன் வாயிலாக, சந்தை வாய்ப்பு குறைந்த விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும்.
வேளாண் துறையில் புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு மானியம் வழங்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோட்டில் மஞ்சள் மெருகூட்டும் மையம், பண்ருட்டியில் பலா மதிப்பு கூட்டும் மையம், பெரம்பலுாரில் சிறுதானிய மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளன.
'ட்ரோன்'
வேளாண் துறையில், 'ட்ரோன்' தொழிற்நுட்பத்தை பிரபலப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஏற்றுமதி தர பரிசோதனை ஆய்வகங்களை நிறுவி, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
தர்மபுரி, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், வறட்சி தணிப்பு சிறப்பு உதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெல்டா பகுதிகளில், மாற்று பயிர் சாகுபடிக்கு திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு நுண்ணீர் பாசனத்தை அதிகரிப்பதற்கு, மத்திய அரசு கூடுதலாக, 300 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
வேம்ப மரம் நம் பாரம்பரிய மரம். ஆனால், குஜராத்தில் இருந்து தான் வேப்பம் புண்ணாக்கு இங்கு வருகிறது. எனவே, வேப்ப மரம் வளர்ப்பிற்கும், ஆடாதொடா, நொச்சி ஆகிய இயற்கை பூச்சிக்கொல்லிகள் வளர்ப்பிற்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

