25 பட்டப்படிப்புகளுக்கு உயர் கல்வித்துறை அங்கீகாரம்
25 பட்டப்படிப்புகளுக்கு உயர் கல்வித்துறை அங்கீகாரம்
ADDED : அக் 13, 2025 12:26 AM

சென்னை: பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, உயர் கல்வித்துறை செயலர் சங்கர் வெளியிட்டுள்ள அரசாணை:
தமிழக உயர் கல்வி துறையின், இணை தன்மை குழுவின் ஆலோசனை கூட்டம், கடந்த மாதம், 16ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், பல்வேறு படிப்புகளுக்கு இணை தன்மை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மனோன்மணியம் சுந்தரனார், மதுரை காமராஜர், திருவள்ளுவர், பாரதியார் பல்கலை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் நடத்தப்படும், 'பி.லிட்.,' தமிழ் பட்டப்படிப்பு, வேலை வாய்ப்பு வகையில், பி.ஏ., தமிழ் படிப்புக்கு சமமானது.
பெரியார் பல்கலையில் நடத்தப்படும், பி.ஏ., ஆங்கில இலக்கியம், வேலைவாய்ப்பு வகையில், பி.ஏ., ஆங்கிலம் படிப்புக்கு சமமானது. அதேபோல, பெரியார் பல்கலையில் நடத்தப்படும், எம்.ஏ., ஆங்கில இலக்கியம், வேலை வாய்ப்பு வகையில், எம்.ஏ., ஆங்கிலம் படிப்புக்கு சமமானது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வழங்கும், எம்.எஸ்சி., உயிரி வேதியியல் தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு வகையில், எம்.எஸ்சி., உயிரி தொழில்நுட்ப படிப்புக்கு சமமானது.
சென்னை பல்கலையில் நடத்தப்படும் கணினி பயன்பாட்டுடன் கூடிய பி.எஸ்சி., இயற்பியல் படிப்பு, வேலை வாய்ப்பு வகையில், பி.எஸ்சி., இயற்பியல் படிப்புக்கு இணையானது.
அண்ணா பல்கலை வழங்கும், எம்.பி.ஏ., விருப்ப பொருளாதார படிப்பு, அழகப்பா பல்கலை வழங்கும் எம்.பி.ஏ., வங்கி மற்றும் நிதி படிப்பு போன்றவை, வேலை வாய்ப்பு வகையில், எம்.பி.ஏ., பொருளாதாரம், நிதித் துறையில் நிபுணத்துவம் படிப்புக்கு சமமானது என, மொத்தம், 25 பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.