வெளியாட்களை உள்ளே விடக்கூடாது; கல்லூரிகள், பல்கலைகளுக்கு உத்தரவு
வெளியாட்களை உள்ளே விடக்கூடாது; கல்லூரிகள், பல்கலைகளுக்கு உத்தரவு
ADDED : டிச 29, 2024 08:34 PM

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உயர்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. அண்ணா பல்கலை விடுதிகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வார்டன்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பல்கலை வளாகத்தில் 30 புதிய சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தவும், பழுதான கேமராக்களை சரி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உயர்கல்வித்துறை செயலர் நடத்திய ஆலோசனைக்குப் பின் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில்;, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத நபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. வெளியாட்களின் நடமாட்டம் இருந்தால், உடனே பதிவு செய்ய வேண்டும்.
கல்வி நிறுவன வளாகத்திற்குள் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்குவது கட்டாயமாகும். ஏதேனும் புகார்கள் எழுந்தால், கடுமையான, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவேட்டு முறையை முறையாக கடைபிடிக்க வேண்டும். காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர்கள் அதனை பயன்படுத்த செய்ய வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் குறைபாடுகள் ஏற்பட்டால் ஏற்றுக் கொள்ள முடியாது. துணைவேந்தர்கள், பதிவாளர்கள், டீன்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.