நெடுஞ்சாலை திட்ட மதிப்பீடு; தமிழில் தயாரிக்க கோரி வழக்கு
நெடுஞ்சாலை திட்ட மதிப்பீடு; தமிழில் தயாரிக்க கோரி வழக்கு
ADDED : ஏப் 01, 2025 03:03 AM

சென்னை : நெடுஞ்சாலைத துறை பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டை, தமிழில் தயாரிக்க அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலித்து, எட்டு வாரங்களுக்குள் தமிழக அரசு முடிவெடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழக நெடுஞ்சாலை துறை டிப்ளமா பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் மாரிமுத்து தாக்கல் செய்த மனு:
தமிழக அரசின் அலுவல் மொழி தமிழ். தமிழ் வளர்ச்சிக்காக, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தமிழ் மொழி வளர்ச்சி சார்ந்து, பல்வேறு நிகழ்வுகளை அரசு நடத்தி வருகிறது. இருப்பினும், நெடுஞ்சாலை துறையில், திட்ட மதிப்பீடுகள் தயாரிப்பது, இன்று வரை ஆங்கில மொழியிலேயே உள்ளது.
தமிழில் தயாரிப்பது தொடர்பாக, 2023 ஜூன் 2ல் அரசுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மனுவை பரிசீலித்து, திட்ட மதிப்பீடுகளை தமிழில் தயாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ப.ராஜேந்திரன் ஆஜரானார்.
இதையடுத்து, மனுதாரர் சங்கத்தின் கோரிக்கையை எட்டு வாரங்களில் பரிசீலித்து, உரிய உத்தரவுகள் பிறப்பிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.