விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க சதி: போலீஸ் மீது ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க சதி: போலீஸ் மீது ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
ADDED : ஆக 29, 2025 04:29 AM

சென்னை:விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க, தமிழக காவல்துறை சதி செய்வதாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டிஉள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், 42 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியை, ஹிந்து ஒற்றுமை, எழுச்சி திருவிழாவாக ஹிந்து முன்னணி நடத்தி வருகிறது.
ஜாதி, மொழி வேறுபாடின்றி ஹிந்துக்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஒன்றுகூடவும், வழிபாட்டு உரிமையை உணரவும், இந்த விழா நடத்தப்படுகிறது.
சமுதாய ஒற்றுமை தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் கசக்கிறது. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்யவும், விநாயகர் சதுர்த்தி விழாவை கெடுக்கவும், கட்டுப்பாடு என்ற பெயரில் சதி நடக்கிறது.
மிரட்டல் நேற்று முன்தினம் சென்னையில் பல இடங்களில், தேவையற்ற கெடுபிடிகளை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. சூளைமேடு பகுதியில் நள்ளிரவில், விநாயகர் சிலையை காவல்துறையினர் துணையோடு திருடி சென்றது, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், சுப்பிரமணிய பேரி கிராமத்தில், மக்கள் எதிர்ப்பை மீறி, கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ரகுநாதன் விநாயகர் சிலையை எடுத்து சென்றுள்ளார்.
நாங்குநேரி பட்டர்புரம் ஸ்ரீ அல்லல் காத்த அய்யனார் கோவிலில் வைத்த விநாயகருக்கு வழிபாடு நடத்த விடாமல் காவல்துறை கெடுபிடி செய்கிறது.
பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திண்டுக் கல் பகுதிகளில் காவல்துறை அடக்குமுறையை கையாண்டுள்ளது.
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், காவல் துறையினருக்கு, உங்கள் பகுதியில் விநாயகர் எண்ணிக்கை குறைந்தால் வெகுமதி கிடைக்கும். ஒன்று கூடினால் மெமோ அளிக்கப்படும் என, 'வாக்கிடாக்கி'யில் மிரட்டல் விடுத்துள்ளார்.
கெடுபிடி இத்தகைய செய்திகள், விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறையில் உள்ள சிலருக்கு உள்நோக்கம் இருப்பதாக தெரிய வருகிறது.
மற்ற மதங்களின் ஊர்வலங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல், காவல்துறை அனுமதி அளிக்கிறது. ஆனால், ஹிந்து மதம் என்றால் கெடுபிடி காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.