வீட்டுக்காவலில் ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள்
வீட்டுக்காவலில் ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள்
ADDED : நவ 23, 2026 11:30 PM
ஆத்துார்: ஆத்துாரில், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட நான்கு பேரை, போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், இன்று ஒரு முறை மட்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன், இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்கவோ, ஊர்வலங்கள் நடத்தவோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்துார் டவுன் போலீசார், இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சபரிராஜா, தலைவாசல் போலீசார், சிறுவாச்சூரை சேர்ந்த பா.ஜ., முன்னாள் நிர்வாகி முருகன், தம்மம்பட்டி போலீசார், இந்து முன்னணி நிர்வாகி ராஜா ஆகியோரை வீட்டு காவலில் வைத்துள்ளனர். அதேபோல், ஏத்தாப்பூர் போலீசார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரசாந்த் என்பவரை, வீட்டு காவலில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து, சேலம் எஸ்.பி., குத்தாலிங்கம் கூறுகையில், ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது, தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக, மாவட்டம் முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளில், 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளனர். பெங்களூரு, ஒசூர் பகுதியில் இருந்து, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலுார் வழியாக செல்லும் கன்டெய்னர் போன்ற சரக்கு வாகனங்கள், அவ்வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள், ஓமலுார், தீவட்டிப்பட்டியில் இருந்து, ஆத்துார், கள்ளக்குறிச்சி வழியாக சென்னைக்கு செல்லும் வகையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்பு நிர்வாகிகளின் போராட்டங்களை தவிர்க்கும் வகையில், போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,’’ என்றார்.
இந்து முன்னணி சேலம் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் சின்னுசாமியை சங்ககிரி போலீசார் இன்று (நவ.,23) இரவு 7:00 மணி முதல் வீட்டு காவலில் வைத்துள்ளனர். அவரது வீட்டின் முன் எஸ்.ஐ., அழகுதுரை, தலைமை காவலர் பிரபு ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழப்பாடியை சேர்ந்த, ப.ஜ.,சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதனை, வாழப்பாடி போலீசார், வீட்டு காவலில் வைத்து, இரண்டு எஸ்.ஐ.,க்கள் உள்பட நான்கு பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் ராஜேஸ்குமார், நாமக்கல் மாநகர இந்து முன்னணி தலைவர் ரஞ்சித், செயலாளர் கண்ணன், எருமப்பட்டி ஒன்றிய தலைவர் கனகராஜ் ஆகியோர், வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
