ADDED : நவ 05, 2025 01:13 AM

திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கோவையில் கல்லுாரி மாணவி ஒருவர், பாலியல் கொடூரத்துக்கு ஆளானது, தமிழகத்தை தலைகுனிய வைத்திருக்கிறது. எல்லா வகையான குற்றங்களுக்கும், போதை மிக முக்கிய காரணியாக உள்ளது. இதுபோன்ற கொடூர குற்றத்தில் இருந்து சமூகமும், அரசும், காவல்துறையும் பாடம் கற்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
பெண் குழந்தைகளை பெற்றோர், மிகுந்த கண்காணிப்போடு வளர்க்க வேண்டிய பொறுப்பை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.ஆண் குழந்தைகளின் நட்பு வட்டத்தையும், கவனித்து திருத்தும் கடமையை பெற்றோர் உணர வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் சிறு வயது முதலே நல்ல பண்புகளை கற்றுதர வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நுாற்றாண்டில் சமூக மாற்றத்துக்கான 'ஐந்தமுதம்' என்ற கருத்தை முன்னெடுக்கிறது. அதில், ஒன்று குடும்ப ஒற்றுமை. தினசரி ஒரு வேளையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி அளவளாவி கருத்து பரிமாற்றத்தின் வாயிலாக சமூக உணர்வை வளர்ப்பது. உண்மையில், குடும்பங்களில் இன்று இது மிக மிக அவசியமானது. இதன் மூலம், ஒருவருக்கு, ஒருவர் பரபஸ்பரம் அன்பும், நம்பிக்கையும், பண்பும் உறுதிபடும்.
தமிழக அரசு போதையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக பொறுப்பற்றவர்களை கண்காணித்து சீர்படுத்த காவல்துறை முனைந்து செயல்பட வேண்டும். அதற்கு காவல்துறையின் ரோந்து பணி அவசியமானது. தமிழகத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் இதுபோன்ற காட்டுமிரண்டித்தனமான குற்றம் நடைபெறாமல் இருக்க, எல்லோருக்கும் பொறுப்பு இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, கூறியுள்ளார்.

