ADDED : நவ 30, 2024 09:52 PM
சென்னை:முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
பொது மக்களிடம், எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தின கருப்பொருள், 'உரிமைப் பாதையில்' என்பதாகும். ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட உரிமைகளை, அங்கீகரிப்பதன் வழியே, எய்ட்ஸ் நோயை முழு அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதே அதன் பொருளாகும்.
தமிழக அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இணைந்து, எச்.ஐ.வி., தடுப்பு பணிகளை திறம்பட செயல்படுத்தியதால், தமிழகத்தில், எச்.ஐ.வி., தொற்றின் தாக்கம், தேசிய அளவிலான, 0.23 சதவீதத்தில் இருந்து, 0.16 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
எச்.ஐ.வி., தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து, கருவில் உள்ள குழந்தைகளுக்கு, நோய் பரவாமல் தடுத்திட, அனைத்து கர்ப்பிணிகளுக்கும், அரசு மருத்துவமனைகளில் செயல்படும், 'நம்பிக்கை மையம்' வாயிலாக, எச்.ஐ.வி., பரிசோதனை செய்யப்படுகிறது.
இதன் வழியே நோய் தொற்று ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டு, தாயிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைக்கு நோய் பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து மிக்க உணவு, கல்வி உதவித்தொகை போன்றவை வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில், 7,303 குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட, பொதுமக்கள் உறுதி ஏற்க வேண்டும். அத்துடன் நோய் தொற்று உள்ளோரை, மனித நேயத்துடன் அரவணைத்து, ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.