கருப்பை வாய் புற்று நோயை கண்டறிய வீடுகளுக்கே சென்று பரிசோதனை
கருப்பை வாய் புற்று நோயை கண்டறிய வீடுகளுக்கே சென்று பரிசோதனை
ADDED : நவ 23, 2025 01:51 AM
சென்னை: கருப்பை வாய் புற்று நோயைக் கண்டறிய, வீடுகளுக்கே சென்று, சுகாதாரப் பணியாளர்கள் வாயிலாக பரிசோதனை செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது.
'ஹியூமன் பாப்பிலோமா' வைரஸ் எனப்படும் கிருமி தொற்று காரணமாக, கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது.
உறுப்புகளுக்கும் பரவும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கருப்பை வாயின் உயிரணுக்களில், புற்று செல்கள் பரவி, அதன் திசுக்களை பாதிக்கும்.
உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீர்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய தரவுகளின்படி, தமிழகத்திலேயே தர்மபுரி மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களில், கருப்பை வாய் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது.
அங்கு, லட்சத்தில் 36 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அரியலுாரில் 29, சென்னையில் 13 ஆக உள்ளது. தமிழகத்தின் மொத்த கருப்பை வாய் புற்று நோய் பாதிப்பு விகிதம், லட்சத்துக்கு 14 ஆக உள்ளது.
இந்த சூழலில், அதற்கான பரிசோதனையை, பெண்கள் மேற்கொள்ள வேண்டும் என, அரசு சார்பில், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், மருத்துவமனைகளுக்கு சென்று, பிறப்புறுப்பு திரவ மாதிரியை சோதிக்கும் பரிசோதனையை மேற்கொள்ள, பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
பகுப்பாய்வு இதையடுத்து, வீடுகளுக்கே சென்று, அவர்களுக்கு பரிசோதனை உபகரணங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.சுகாதார பணியாளர்கள், கொரோனாவுக்கு பயன்படுத்தியதை போல், 'ஸ்வாப்' உபகரணத்தை பெண்களுக்கு வழங்குவர்.
அவர்கள் சுய பரிசோதனை வாயிலாக, மாதிரியை சேகரித்து, சுகாதாரப் பணியாளர்களிடமே திருப்பி வழங்குவர். அவை மருத்துவமனைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, வைரஸ் தொற்று உள்ளதா என்பது கண்டறியப்படும்.
இது குறித்து, தேசிய நலவாழ்வுக் குழுமத் திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ் கூறுகையில், “இத்திட்டம் முதற்கட்டமாக தர்மபுரியில் செயல்படுத்தப்பட உள்ளது.
''தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், அதற்கான உபகரணங்களை கொள்முதல் செய்த பின், படிப்படியாக மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்,” என்றார்.

