பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை
UPDATED : அக் 11, 2026 09:07 PM
ADDED : அக் 11, 2026 07:58 PM
கோவை: தமிழக அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என, கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதகை அரசு கலைக்கல்லுாரியில், அண்மையில் உயிரிழந்த நாகப்பட்டினம் அரசு கலைக்கல்லுாரி விரிவுரையாளர் செந்தில்குமார், கோவை அரசு கலைக்கல்லுாரி விரிவுரையாளர் பெருந்தமிழ் கவிகன் ஆகியோருக்கு இரங்கல் கூட்டம் கோவையில் நடந்தது. இதில், கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து, விரிவுரையாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:
அரசு கல்லுாரிகளில் பேராசிரியர்களுக்கு இணையாக கற்பித்தல், தேர்வுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கவுரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், குறைந்த ஊதியம், பணிப் பாதுகாப்பின்மை, மருத்துவ வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பிரச்னைகளை நீண்டகாலமாக எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட ரூ.5,000 ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நீண்டகாலமாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை, யு.ஜி.சி., நிர்ணயித்த அடிப்படை ஊதியத்தை வழங்குவதுடன், விரிவுரையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விப் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தையும், குடும்பங்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
