காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கைது
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கைது
UPDATED : ஏப் 24, 2025 02:55 AM
ADDED : ஏப் 24, 2025 02:51 AM

சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்களை கைது செய்த போலீசார், அவர்களை குண்டுக்கட்டாக துாக்கி பஸ்சில் ஏற்றி, சமூக நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 7,360 கவுரவ விரிவுரையாாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுகின்றனர்.
பணி நிரந்தரம் இல்லை
துவக்கத்தில், 3,000 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்து, தற்போது 25,000 ரூபாய் மாதச் சம்பளமாக பெறுகின்றனர்.
அதாவது, யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்ட இவர்கள், இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
நிரந்தர பணியமர்த்தும் வகையில், கடந்த 12 ஆண்டு களுக்கும் மேலாக, ஆசிரியர் தேர்வாணையமான, டி.ஆர்.பி., தேர்வுகளும் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஆட்சி நிறைவடையும் தருவாயில், 1,146 பேரை பணியமர்த்தும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை பணி நியமனம் செய்யப்படவில்லை.
கடந்த, 20 ஆண்டுகளாக நிரந்தரமில்லாமல், 11 மாதங்கள் மட்டுமே வழங்கப்படும் சம்பளத்துக்காக பணியாற்றும் நிலையில், தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வலியுறுத்தி, கடந்த மூன்று நாட்களாக, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்குனரகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்கள், நேற்று மாலை கைது செய்யப்பட்டு, நந்தனம் சமூக நலக்கூடத்தில் அடைக்கப்பட்டனர்.
கட்டுப்பாடுகள்
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
பல்கலை மானிய குழுவின் வரையறைகளுக்கு உட்பட்டு, பணியில் சேர்க்கப்பட்ட நாங்கள், நிரந்தர விரிவுரையாளர்களை விட, அதிக பணிகளை செய்கிறோம். ஆனால் நாங்கள், பிஎச்.டி.,க்கு வழிகாட்டியாக இருக்க முடியாது. இதுபோல, பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
எங்களில் பலர் இறந்து விட்ட நிலையில், அவர்களுக்கு கருணைத்தொகை கூட கிடைக்கவில்லை. எந்த பணி பாதுகாப்பும் இல்லாத நிலையில் உள்ள எங்களுக்கு, பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.