தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எதிர்பார்ப்பு!

எதிர்பார்ப்பு!

எதிர்பார்ப்பு!


ADDED : நவ 23, 2026 09:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 09:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ.,23) விசாரணைக்கு வராததால், ‘திருப்பரங்குன்றம் தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து, மாநில அரசு செயல்படும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. அதை உறுதி செய்யும் வகையில், கார்த்திகை தீப நாளான இன்று, மதுரையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, கடந்த 100 ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இஇ



கடந்த 2025 நவம்பரில், ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ‘தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, உத்தரவிட்டது; ஆனாலும் தீபம் ஏற்றப்படவில்லை.

இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 6ல், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அரவிந்தகுமார், விபுல் பஞ்சோலி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீபத் திருநாளில், தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என, உத்தரவிட்டது.

தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதிபதிகள், ‘கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றச் செல்ல வேண்டும்; ஊர்வலம் நடத்தவோ, கோஷம் போடவோ கூடாது’ என்பது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளையும் விதித்தனர்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவுக்கு, ஹிந்து அமைப்புகள், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசை, ஒரு சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து, தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை, மறு ஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வினய், சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:

திருப்பரங்குன்றம் மலையில், சம்பந்தப்பட்ட துாணில் தீபம் ஏற்றுவது அத்தியாவசியமான சமய நடைமுறையா என்பது குறித்து, உச்ச நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இஇ



கடந்த 1959ம் ஆண்டு ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி, உச்சிப் பிள்ளையார் கோவிலில் விளக்கு ஏற்றுவதே, தற்போதைய வழக்கமாக உள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிப்பது, திருப்பரங்குன்றத்தில் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா, இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக அரசின் இந்த சீராய்வு மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இரு நீதிபதிகளும், ஒரே அமர்வில் அமர்ந்து இன்று வழக்குகளை விசாரிக்கவில்லை. வெவ்வேறு நீதிபதிகளின்

அமர்வுகளில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தனர். அதனால், தமிழக அரசின் மனு இன்று விசாரணைக்கு வரவில்லை.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு, உச்ச நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை. எனவே, சீராய்வு மனுவை, அவசர வழக்காக விசாரிக்குமாறு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன், தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று மாலை வரை, அதுபோன்ற எந்த முறையீடும் செய்யப்படவில்லை. எனவே, உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை, தமிழக அரசு செயல்படுத்தியே ஆக வேண்டும். இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, தமிழக அரசு எதிர்கொள்ள நேரிடும் என, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இன்று திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும், முருக பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மதுரையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us