கடலூரில் கோர விபத்து; பள்ளி வேன் மீது ரயில் மோதி மாணவர் 3 பேர் பலி!
கடலூரில் கோர விபத்து; பள்ளி வேன் மீது ரயில் மோதி மாணவர் 3 பேர் பலி!
UPDATED : ஜூலை 09, 2025 12:22 AM
ADDED : ஜூலை 08, 2025 08:13 AM
முழு விபரம்

கடலூர்: கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியது. மாணவர் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் இன்று காலை சென்று கொண்டிருந்தது. செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் டிரைவர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார். அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் பள்ளி சாருமதி, நிமலேஷ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் செழியன், 15, உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த செழியனும், சாருமதியும் சகோதரன், சகோதரி ஆவர்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரயில் வருவதை டிரைவர் கவனிக்காமல் கடக்க முயன்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிகிறது. ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படாததால் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் மோதியதில் வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. அதில் இருந்த பள்ளி குழந்தைகள், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் தண்டவாளம் எங்கும் சிதறி கிடந்தன.
சம்பவம் நடந்த இடத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டுள்ளனர். காயம் அடைந்த மாணவ மாணவியருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ரயில்வே நிர்வாகம் விளக்கம்
இது குறித்து ரயில்வே துறை கூறியதாவது:
* கேட் கீப்பர் முறையாக கேட்டை முறையாக கேட்டை மூட முயற்சித்துள்ளார்.
* பள்ளி வேன் டிரைவர் தான் கேட்டை மூடக்கூடாது எனக் கூறியுள்ளார்.
* ரயில் வருவதை அறிந்து, கேட்டை மூடும் போது பள்ளி வேன் டிரைவர் மீறி இயக்கி உள்ளார்.
* செம்மங்குப்பத்தில் பள்ளி வேன்- ரயில் மோதி ஏற்பட்ட விபத்து காலை 7.45 மணிக்கு நிகழ்ந்துள்ளது.
* விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
நிவாரணம் அறிவிப்பு
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
ரயில்வே கேட் மூடவில்லை!
''வழக்கமாக செல்லும் வழியில் தான் சென்றோம். ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது. சிக்னல் எதுவும் போடவில்லை. ரயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை. பள்ளி வேன் கடந்து சென்ற போது ரயில் மோதியது'' என விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் விஸ்வேஷ் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ''விபத்து நடந்த போது ரயில்வே கேட் மூடவில்லை திறந்து தான் இருந்தது'' என பள்ளி வேன் டிரைவர் சங்கர் கூறினார்.
ரூ.5 லட்சம் நிவாரணம்!
பலியான மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
மன வேதனை!
த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது; விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ரயில் சேவையில் மாற்றம்
விபத்து எதிரொலியாக திருவாரூர்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் வரை செல்லும், மைசூர் - கடலூர் விரைவு ரயில் புதுச்சத்திரம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.