'டார்ச் லைட்' வெளிச்சத்தில் மருத்துவமனையில் சிகிச்சை
'டார்ச் லைட்' வெளிச்சத்தில் மருத்துவமனையில் சிகிச்சை
ADDED : நவ 14, 2024 05:03 AM

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கான கிராம மக்கள், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில், சில மாதங்களுக்கு முன், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் அவசர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இடுக்கொரை பகுதியைச் சேர்ந்த துரை, ஆனந்தி தம்பதியின், 3 வயது மகள் தேன்மொழிக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிக்கும் நேரத்தில், மூன்று முறை மின்தடை ஏற்பட்டது. இதனால், 'டார்ச் லைட்' வெளிச்சத்தில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், மின்தடை ஏற்பட்ட நேரத்தில், 'டார்ச் லைட்' உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதை சிலர், 'வீடியோ' பதிவு செய்து நேற்று வெளியிட்டனர்.
அதைப் பார்த்த, கோத்தகிரி அரசு மருத்துவமனை டாக்டர் சிவகுமார் கூறுகையில்,''சிகிச்சை அளிக்கப்பட்ட அறையில் மின்தடை ஏற்பட்டபோது, 'ஜென்செட்' அமைந்துள்ள அறைக்கு சென்று, ஜென்செட்டை ஆபரேட்டர் ஆன் செய்வதற்குள், 'வீடியோ' எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பரவ விட்டவர்கள் செயல் வருத்தம் அளிக்கிறது,'' என்றார்.